தொப்பூர் கணவாயில் துணி பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது 2 டிரைவர்கள் படுகாயம்
தொப்பூர் கணவாயில் துணி பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:
லாரி கவிழ்ந்தது
மும்பையில் இருந்து துணி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை மதுரைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் வேல்முருகேசன் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அதேபகுதியை சேர்ந்த மாற்று டிரைவராக ராமராசு (50) என்பவர் உடன் வந்தார்.
தொப்பூர் கணவாய் முதல் வளைவில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விசாரணை
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து டிரைவர்கள் வேல்முருகேசன் மற்றும் ராமராசு ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.