3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விவசாயிகளின் உரிமையை பறிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெறுதல், விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்வது, தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் 26-ந் தேதி (அதாவது நேற்று) போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.
விருத்தாசலம்
அதன்படி விருத்தாசலம் பாலக்கரையில் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார்.
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும், புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ராஜேந்திரன், உழவர் முன்னணி மணிமாறன், தமிழ் தேச மக்கள் கட்சி பேரின்பன், மாதர் சங்கம் சத்யா, மக்கள் அதிகாரம் அசோக், மக்கள் விடுதலை ராமர், அகில இந்திய விவசாயிகள் மகாசபை உழவர் மன்றம் ராஜசங்கர், டைபி கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சிவஞானம், தமிழ் தேசிய மக்கள் இயக்கம் வேல்முருகன், மக்கள் அதிகாரம் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில்
இதேபோல் காட்டுமன்னார்கோவிலில் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் அறவாழி, சுகாதார ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வநாதன், ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கெர்ணடவர்கள் மத்திய அரசை கண்டித்து
கோஷங்களை எழுப்பினர்.
இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டத் தலைவர் பொன்னம்பலம் , கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் வட்ட நிர்வாகிகள் காளிதாஸ், விமல், கண்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்ட துணை செயலாளர் மணிகண்டன், வட்ட நிர்வாகிகள் ஆகாஷ், மற்றும் வெற்றி குமார், இதயத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தபால் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கற்பனை செல்வம், மாவட்ட துணைத்தலைவர்கள் சதானந்தம், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் பாரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கொளஞ்சி, ஜீவா, கான்சாகிப் வாய்க்கால் சங்கத்தை சேர்ந்த கண்ணன், டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் மதிவாணன், இந்திய தொழிற்சங்க மையம் சங்கமேஸ்வரன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி
பண்ருட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் முன்பு, வோளண் சட்டங்களை திரும்ப பெறவும், மோட்டார் வாகன சட்டம் 2020-ஐ திரும்ப பெறவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு , ஏ.ஐ.டி.யு. சி., சி.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. ஆகியன சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், சி.ஐ.டி.,யு.சி. ராஜேந்திரன், ஐ.என்.டி.யு.சி. பலராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சக்திவேல், ஏ.ஐ.டி.யு.சி. முருகன், ஞானசேகர், தணிகாசலம், சி.ஐ.டி.யு.சி. சார்பில் தனபால், பன்னீர்செல்வம், ஐ.என்.டி.யு.சி. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் சீனுவாசன் உள்பட பலர்கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.