தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.25 கோடியில் கட்டுமான பணிகள்; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.25 கோடியில் கட்டுமான பணிகளை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.25 கோடியில் கட்டுமான பணிகளை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
ரூ.25 கோடி
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மீனவர்நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு ரூ.25 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் மீனவர்களுக்கு மானிய விலையில் படகில் வெளிப்பொருத்தும் எஞ்சினை வழங்கினார்.
நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும்
பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியும் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மீனவர்களின் உரிமைகள், மீனவர்களின் நலன்கள், கோரிக்கைகள் ஆகியவற்றை பாதுகாப்பதில் உங்களோடு நின்று உங்களுடைய கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றி தரக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள். கடந்த காலத்தில் தங்களுடைய எல்லா கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தந்தார்கள். டீசல் மற்றும் மண்எண்ணெய் மானியத்தை பெற்று தந்தார்கள்.
மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்பிடி தடைகாலத்தில் ரூ.5 ஆயிரம் நிவாரணத்தொகையை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறினோம். அதன்படி விரைவில் மீன்பிடி தடைகாலத்தில் நிவாரணத்தொகை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மீனவர்களுக்கு தனி வங்கி
விவசாய பொருட்கள் மற்றும் மீன்களை அவசர அவசரமாக விற்கவேண்டிய சூழல் உள்ளது. தற்போதைய சுற்றுப்புற சூழல் மாற்றங்கள் மற்றும் கால மாற்றங்களினால் மீன் கிடைப்பதே அரிதாக உள்ளது. மீன்பிடிப்பதற்கு மீனவர்கள் மிகவும் சிரமப்பட்டு மீன்களை பிடிக்கிறார்கள். இந்நேரத்தில் கொண்டுவரப்பட்ட மீன்கள் ஒரு சில நேரங்களில் அவர்களுக்கு லாபமான விலைக்கு விற்க முடியாத நிலை உள்ளது. இதனால் மீன்களை பதப்படுத்தி பத்திரப்படுத்தி நல்ல விலை வரும் போது விற்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டால் மீனவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்
எனவே விரைவில் மீன்களை பதப்படுத்தி பத்திரமாக சேகரிக்கும் குளிரூட்டப்பட்ட அறை கட்டித்தரப்படும். மீனவர்களுக்கு தனி வங்கி அமைப்பதற்கான முயற்சிகள் மத்திய அரசிடம் பேசி நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும். மேலும் ரூ.88 கோடி மதிப்பில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மண்டல இணை இயக்குனர் அமல்சேவியர், மீன்வளத்துறை, மீன்பிடி துறைமுக திட்டக் கோட்ட செயற்பொறியாளர் கங்காதரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், மீன்வளத்துறை மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு உதவி இயக்குனர் அன்றோ பிரின்சி வைலா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.