விழுப்புரம் கோட்டத்தில் 3 ஆயிரம் பஸ்களை இயக்க ஏற்பாடு
நாளை முதல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுவதையொட்டி விழுப்புரம் கோட்டத்தில் 3 ஆயிரம் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பணிமனைகளில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்கும் விதமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவினால் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன.
தற்போது நோய் தொற்று பரவல் சற்று குறையத்தொடங்கியதையடுத்து ஒவ்வொரு வாரமும் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த தளர்வுகளின்படி தற்போது பெரும்பாலான கடைகள் இயங்கி வருகின்றன. ஆனால் கடந்த 1½ மாதங்களுக்கும் மேலாக அரசு பஸ்கள் எதுவும் இயங்காமல் அந்த பஸ்கள் அனைத்தும் அந்தந்த போக்குவரத்துக்கழக பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டு ஓய்வெடுத்து வருகிறது.
போக்குவரத்து தொடக்கம்
இந்நிலையில் 6-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. அடுத்தகட்டமாக 7-வது முறையாக மேலும் சில தளர்வுகளுடன் வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நோய் தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்களை 3 வகைகளாக வகைப்படுத்திய அரசு, வகை 3-ல் உள்ள சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த வாரம் பஸ் போக்குவரத்துக்கு அனுமதியளித்தது.
இதன் தொடர்ச்சியாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் வகை 2-ல் உள்ள மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நாளை முதல் 50 சதவீத பயணிகளுடன் பஸ் போக்குவரத்தை தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது.
புனரமைப்பு பணிகள் மும்முரம்
இதையொட்டி அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பஸ் போக்குவரத்தை தொடங்குவதற்காக அந்தந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் 1½ மாதத்திற்கும் மேலாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பஸ்களை புனரமைப்பு செய்து தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 1, 2, 3, செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி பணிமனை எண் 1, 2, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை பழுதுநீக்கி சுத்தம் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
3 ஆயிரம் பஸ்களை இயக்க ஏற்பாடு
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கொரோனா தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் முதல்கட்டமாக 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 23 மாவட்டங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதையொட்டி விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்களில் 3,166 பஸ்களை, பயணிகளின் தேவைக்கேற்ப இயக்க உள்ளோம். இதற்காக அனைத்து பணிமனைகளிலும் நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்களை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருவதோடு பஸ்சில் ஏதேனும் பழுதுகள் இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அந்த பழுதுகளையும் சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அதுபோல் கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக விளங்கும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள ஏற்கனவே பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் கோட்டத்தில் உள்ள டிரைவர்கள், கண்டக்டர்கள் என 22 ஆயிரம் பேரில் 90 சதவீதத்திற்கும் மேலானோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர் என்றார்.