புதுஆற்றில் கழிவுநீர் கலப்பு

தஞ்சையில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு புதுஆற்றில் கழிவுநீர் கலந்தது. உடனே சாக்குகள், சிமெண்டு மூலம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-25 21:01 GMT
தஞ்சாவூர்;
தஞ்சையில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு புதுஆற்றில் கழிவுநீர் கலந்தது. உடனே சாக்குகள், சிமெண்டு மூலம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டம்
தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆள்நுழை குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட்டால் ஆன வட்ட வடிவில் மூடி போட்டு மூடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கழிவுநீர் உந்து நிலையம் கரந்தை, வடக்குவாசல், பள்ளியக்கிரஹாரம், மாரிக்குளம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
மாநகரில் உள்ள 51 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீர், ராட்சதக் குழாய்கள் மூலம் தஞ்சை சமுத்திரம் ஏரி பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அந்த தண்ணீர் பாசன வாய்க்காலில் விடப்படுகிறது.
ராட்சத குழாயில் உடைப்பு
கழிவுநீர் கொண்டு செல்லப்படும் ராட்சத குழாய் பெரும்பாலான இடங்களில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. தஞ்சை வண்டிக்காரதெரு பகுதியில் உள்ள கல்லணைக்கால்வாய் (புதுஆறு) மேல் பகுதியில் ராட்சத குழாய் செல்கிறது. இந்த கழிவுநீர் குழாயில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு கழிவுநீரானது கல்லணைக்கால்வாயில் விழும். குழாயில் ஏற்பட்ட விரிசல் தற்காலிகமாக சரி செய்யப்படும்போது கழிவுநீர் வடிந்து கல்லணைக்கால்வாயில் விழுவது நிறுத்தப்படும்.
தற்போது பாசனத்திற்காக கல்லணையில் இருந்து கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கடைமடை பகுதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் கல்லணைக்கால்வாய் மேல் செல்லும் கழிவுநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர், ஆற்று நீரில் கலந்து செல்கிறது. இதன் காரணமாக நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
அதிகாரிகள் பார்வையிட்டனர்
ஆற்று தண்ணீரில் பொதுமக்கள் குளிப்பதுடன் கால்நடைகளையும் குளிப்பாட்டுவார்கள். தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் ஆற்றில் குளிக்கும் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆற்று தண்ணீரில் கலப்பதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை தற்காலிகமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்காலிகமாக அடைப்பு
அதன்படி மாநகராட்சி தொழிலாளர்கள் 2 பேர், சிமெண்டு மூட்டை, சாக்குகள், கயிறுகளுடன் வந்தனர். அவர்கள் குழாயின் உடைந்த பகுதியில் முதலில் சாக்குகளை வைத்து கயிற்றின் மூலம் கட்டினர். பின்னர் சிமெண்டை நன்றாக குழைத்து அந்த சாக்குகள் மீது பூசிவிட்டனர். இதனால் உடைப்பு தற்காலிகமாக அடைக்கப்பட்டு, கழிவுநீர் வெளியேறுவது நின்றது.
இதேபோல் பல இடங்களில் ஏற்பட்ட உடைப்புகளும் தற்காலிகமாகவே சரி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவ்வப்போது உடைப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. எனவே உடைப்பு ஏற்பட்ட குழாயை மாற்றிவிட்டு புதிய குழாய் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்