கொரோனாவுக்கு தாய்-மகன் சாவு; ஒரே நாளில் உயிரிழந்த பரிதாபம்
கலபுரகியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் தாய்-மகன் இறந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரு:
கொரோனா பாதிப்பு
கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தாலுகா வாடி டவுன் பகுதியை சேர்ந்தவர் சாந்திபாய் (வயது 74). இவரது மகன் பஜன் நாயக் (36). கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்திபாய் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டார். இதையடுத்து, கலபுரகியில் உள்ள ஜிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சாந்திபாய்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததால், பஜன் நாயக்குக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
தாய்-மகன் சாவு
இதனால் அவரும் ஜிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தாய், மகனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் சாந்திபாய் இறந்து விட்டார்.
பின்னர் சிறிது நேரத்தில் பஜன் நாயக்குக்கும் இறந்து விட்டார். ஏற்கனவே கடந்த 9 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதித்திருந்த சாந்திபாயின் மூத்த மகனும், புறசபை உறுப்பினருமான பிரகாஷ் நாயக் (46) என்பவர் உயிர் இழந்திருந்தார். தற்போது ஒரே நாளில் தாய், மகன் கொரோனாவுக்கு பலியானது வாடி டவுனில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.