‘‘எனது பொறுமையை சோதிக்காதீர்கள்’’ - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

சித்தராமையா முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் கருத்து கூறி வரும் நிலையில் தனது பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று அவர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-06-25 20:21 GMT
பெங்களூரு:

நிம்மதி கிடைக்கட்டும்

  ஹாசன் மாவட்டம் பேளூர் புரசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட காங்கிரசை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பெங்களூருவில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களின் மத்தியில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

  ஒன்றுபடுவது தொடக்கம், ஒன்றுபட்டு ஆலோசிப்பது வளர்ச்சி, ஒன்றுபட்டு கட்சியை பலப்படுத்துவது வெற்றி என்ற என் கருத்துக்கு பேளூர் புரசபை தேர்தல் முடிவு ஒரு சிறந்த உதாரணம். இதை காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் அலுவலகம் கோவிலை போன்றது. கோவிலுக்கு நாம் சென்று பூஜை செய்கிறோம். நமக்கு நிம்மதி கிடைக்கட்டும், கஷ்டங்கள் நீங்கட்டும் என்பதற்காக கோவிலுக்கு செல்கிறோம்.

பொறுமையாக இருப்பேன்

  அதற்காக தான் காங்கிரஸ் அலுவலகத்தை சற்று மாற்றி அமைத்துள்ளேன். அடுத்த சட்டசபை தேர்தலில் எக்காரணம் கொண்டும் பா.ஜனதா வெற்றி பெறாது. இது அக்கட்சியின் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றாக தெரியும். அதனால் நமது கட்சியினர் காங்கிரசை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கட்சியில் எந்த குழப்பமும் ஏற்படக்கூடாது. குழப்பம் உண்டாக நீங்கள் காரணமாக இருக்கக்கூடாது.

  நான் ஒரு எல்லை வரை பொறுமையாக இருப்பேன். எனது பொறுமையை சில எம்.எல்.ஏ.க்கள் சோதிக்கிறார்கள். அவர்களிடம் எனது பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். காங்கிரசை தான் அனைவரும் பின்பற்ற வேண்டும். நமது தலைவர் ராகுல் காந்தி உத்தரவுப்படி அனைவரும் பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் கொடியே நமது மதம். காந்தி குடும்பத்தில் மட்டுமே தியாக சிந்தனை வரும்.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

நிறுத்த வேண்டும்

  சித்தராமையா முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகிறார்கள். அவ்வாறு கருத்து கூறுவதை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் அறிவுறுத்தினர். 

ஆனாலும் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் தங்களின் கருத்தை கூறுவதால் டி.கே.சிவக்குமார் கோபம் அடைந்துள்ளார். இதை மனதில் வைத்து அவர், என் பொறுமையை சோதிக்காதீர்கள் என கூறி சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்