நெடுந்தூர பஸ்கள் விருதுநகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை

விருதுநகரில் புதிய பஸ் நிலையம் செயல்படவும், நெடுந்தூர பஸ்கள் நகருக்குள் வந்து செல்லவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-06-25 19:46 GMT
விருதுநகர், 
விருதுநகரில் புதிய பஸ் நிலையம் செயல்படவும், நெடுந்தூர பஸ்கள் நகருக்குள் வந்து செல்லவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 மாவட்ட தலைநகர்
 விருதுநகர் மாவட்டம் கடந்த 1985-ம் ஆண்டு  மாவட்ட தலைநகர் அந்தஸ்தை பெற்றது. ஆனால் விருதுநகரில் எதிர்பார்த்த அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாத நிலை நீடிக்கிறது.
 அதிலும் போக்குவரத்து வசதியை பொறுத்தமட்டில் விருதுநகர் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. நகரில் இரண்டு பஸ் நிலையங்கள் உள்ள போதிலும் புதிய பஸ் நிலையம் உலக வங்கி கடனுதவியுடன் நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வராத நிலை நீடிக்கிறது. நகராட்சி சார்பில் வணிக வளாகங்கள் கட்டப்படுவதற்கு கடந்த காலங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் விதிமுறையை சுட்டிக்காட்டி வணிக வளாகங்கள் கட்டப்படுவதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் வணிக வளாகத்திட்ட பணிகளும் முடங்கி விட்டன.
பஸ் போக்குவரத்து 
விருதுநகரில் 2 பஸ் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்பு பஸ் போக்குவரத்தில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மதுரை ஐகோர்ட்டு அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையத்திற்குள்ளோ அல்லது பழைய பஸ் நிலையம் அருகிலோ வந்து செல்ல வேண்டும் என்று வழிகாட்டல் உத்தரவு வழங்கியது.
 விருதுநகர் மாவட்ட தலைநகரான பின்பு நெடுந்தூர பஸ்கள் எதுவும் பஸ்நிலையத்திற்குள் வருவதில்லை. இந்த பஸ்கள் வந்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகமும், வட்டார போக்குவரத்து துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலை தொடர்கிறது.
அவசியம் 
எனவே இனியாவது ஐகோர்ட்டு வழிகாட்டல் படி அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து பழைய பஸ் நிலையம் வழியாகவோ அல்லது பழைய பஸ் நிலையம் அருகிலோ வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 மேலும் நெடுந்தூரபஸ்களும் நகருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகமும், வட்டார போக்குவரத்து துறையும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்