குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த புனரமைப்பு திட்டம் தேவை
விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த புனரமைப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த புனரமைப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம்
விருதுநகரை பொருத்தமட்டில் விருதுநகர் நகராட்சி கடந்த காலங்களில் நிலத்தடி நீர் ஆதாரத்தை கொண்டு குடிநீர் வினியோகம் செய்து வந்த நிலையில் வல்லநாட்டில் இருந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைத்த தண்ணீர் ஓரளவு குடிநீர் வினியோகிக்க கை கொடுத்தது.
ஆனாலும் இந்த கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தனிமின்பாதை அமைக்கப்படாத நிலையில் அவ்வப்போது மின்தடை, குழாய் உடைப்பு காரணமாக இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரில் பாதிப்பு ஏற்படும் நிலையில் நகரில் குடிநீர் வினியோகஇடைவெளி நாட்கள் சராசரியாக 10 முதல் 15 நாட்களாக இருந்து வருகிறது.
புனரமைப்பு திட்டம்
இந்நிலையில் நகரில் குடிநீர் பகிர்மான குழாய்கள் நீண்ட காலத்திற்கு முன்பு பதிக்கப்பட்ட நிலையில் குடிநீர் வினியோகத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டது.
ரூ.21 கோடியில் புதிய புனரமைப்பு திட்டம் வடிவமைக்கப்பட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் இத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில் விருதுநகருக்கு குடிநீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் குழாயில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்ட நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் புதிதாக குழாய் பதிக்கப்பட்டாலும் தொடர்ந்து ஆனைக்குட்டத்திலிருந்து தண்ணீர் கொண்டு வருவதில் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.
தாமதம்
2015-ம் ஆண்டு விருதுநகர் நகராட்சி நூற்றாண்டையொட்டி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விருதுநகர் நகராட்சி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்தார்.
இந்த நிதியிலிருந்து நகரில் 3 இடங்களில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், 2 மேல்நிலை தொட்டிகள் கட்ட பட்ட போதிலும் இன்னும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் இருக்கிறது. குடிநீர் பகிர்மான குழாய் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் நகர குடிநீர்புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டிற்கு வராததால் நகரில் இன்னும் குடிநீர் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது.
எனவே தமிழக அரசு விருது நகரில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த புனரமைப்பு திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வர அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேல்நிலைத்தொட்டிகள் உடனடியாக பயன்பாட்டிற்கு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.