மோகனூர் ஒன்றியத்தில் ரூ.5¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்-உள்ளாட்சி துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு
மோகனூர் ஒன்றியத்தில் ரூ.5¼ கோடியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை உள்ளாட்சி துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.
மோகனூர்,
மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார். மோகனூரில் ரூ.2 கோடியே 93 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார்.
அப்போது கட்டுமானத்தின் தன்மை, பொருட்களின் தரம் குறித்து ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டிட பணிகளை விரைந்து முடித்து பயன்பட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, அய்யம்பாளையம், நோச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 28 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளை பார்வையிட்டு, அதன் தரத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம் சார்பில் அரூரில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, அடர் வனம் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்படுவதை பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேன்மொழி, முனியப்பன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.