கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் 7 லட்சம் நெல் மூட்டைகள்

திருமானூர், தா.பழூர் ஒன்றியங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 7 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை உள்ளது.

Update: 2021-06-25 18:45 GMT
கீழப்பழுவூர்:

நெல் கொள்முதல் நிலையங்கள்
அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான திருமானூர் ஒன்றியத்தில் விவசாயிகளால் சாகுபடி செய்யும் நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்காக தேவைக்கேற்ப 21 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இந்த கொள்முதல் நிலையங்களில் சம்பா சாகுபடி செய்த விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 90 சதவீத நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்த வெளியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏரிகள், வயல்வெளிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அங்கேயே மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
தண்ணீரில் மூழ்கும் அபாயம்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருமானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருமானூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 115 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே உள்ள வயல்வெளிகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது. குறுவை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வரும் நிலையில், வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட்டால் வயல்வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அதிக அளவில் சேதமடையும்.
ஏரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை சுற்றி பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால் அதில் தற்போது தண்ணீர் தேங்கி உள்ளது. கன மழை பெய்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது, நெல் மூட்டைகள் அனைத்தும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. மாவட்டத்தில் சுமார் 50 சதவீத நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் சரியான சாலை வசதி இல்லை.
நெல்மணிகள் முளைக்க தொடங்கின
இதற்கிடையே தற்போது பெய்த மழையில் நனைந்து மூட்டைகளில் உள்ள நெல்மணிகள் முளைக்க தொடங்கிவிட்டன. இதேநிலை தொடர்ந்தால் நெல் மூட்டைகள் அனைத்தும் நாற்றங்காலாகிவிடும். மழைக்காலம் தொடங்குவதற்குள், பாதுகாப்பற்ற முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். அல்லது நேரடியாக அரவைக்கு அனுப்பிவிட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.
மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது உள்ள சூழ்நிலையில் திருமானூர் ஒன்றியத்தில் மட்டும் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து, மழையில் நனைந்து வீணாகி, முளைக்கும் தருவாயில் உள்ளது. தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள 10 கொள்முதல் நிலையங்களில் 3 லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலையில் உள்ளன. எனவே வரக்கூடிய காலங்களில் கொள்முதல் செய்யப்படுகின்ற நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான அடிப்படை வசதிகளை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் செய்ய வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து முக்கியமான பகுதிகளில் மட்டுமாவது நிரந்தர கட்டிடத்துடன் கூடிய நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்