தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம்

விளாத்திவிளை பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படும் என மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2021-06-25 18:03 GMT
நாகர்கோவில்:
விளாத்திவிளை பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படும் என மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாதாரண கூட்டம்
குமரி மாவட்ட பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சிவகுமார், செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் அம்பிளி, செலின் மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ் பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல், ஜான்சிலின் விஜிலா, நீல பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் விவரித்தனர்
கூட்டம் தொடங்கியதும் நாடு முழுவதும் கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ேமலும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான மாத செலவினம் அங்கீகரிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறையின் கடல் அரிப்பு தடுப்பு கோட்ட உதவி பொறியாளர் தாணுமூர்த்தி, நீர்வள ஆதார அமைப்பு அதிகாரி சாஸ்தா சிவன், மீன் துறை ஆய்வாளர் சிவகுமார், மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளர் மேரி ஸ்டெல்லா, தாட்கோ மாவட்ட மேலாளர் ஸ்டெல்லா பாய் ஆகியோர் தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து விவரித்தனர்.
கடல் அரிப்பு தடுப்பு சுவர்
பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசிய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
பொதுப்பணித்துறை குளங்கள் புதர்மண்டி கிடக்கிறது. எனவே அவற்றை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும். கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராம மக்கள் கடல்சீற்றம் காலங்களிலும் பாதிக்காத வகையில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான அரிசி வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய வறுமைக்கோடு பட்டியல்
குமரி மாவட்டத்தில் வசதி படைத்தவர்களுக்கு முன்னுரிமையுடன் கூடிய ரேஷன் கார்டுகளும் ஏழைகளுக்கு முன்னுரிமை அற்ற அட்டை ரேஷன் கார்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், வசதி படைத்தவர்கள் பயன்பெறுகிறார்கள். எனவே தகுதியான ஏழைகளுக்கு முன்னுரிமை ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். 
2003-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வறுமை கோடு பட்டியலின்படி முன்னுரிமை ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே புதிய வறுமை கோடு பட்டியலை தயார் செய்து ரேஷன் கார்டு வழங்க வேண்டும். நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும், என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நீலப்புரட்சி திட்டம்
இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-
குளங்களை தூர்வார விவசாயிகள் விண்ணப்பித்தால் அனுமதி அளிக்கப்படும். தேர்தல் காரணமாக இருந்ததால் புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கு காலதாமதமானது. இனிமேல் உடனுக்குடன் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். முன்னுரிமை உள்ள கார்டுகளாக மாற்ற பல்வேறு தகுதிகள் ஆய்வு செய்யப்படும். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தான் அதிகாரிகளால் முன்னுரிமை கார்டுகளாக மாற்றப்படும். நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வீடு வழங்க சம்பந்தப்பட்ட நபரின் பெயரில் பட்டா இருக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
தொடர்ந்து, கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்துக்கு வராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க மாநில ஊரக வளர்ச்சி இயக்குனரை வலியுறுத்துவது. 
விளாத்துறை-விளவங்கோடு ஊராட்சிகளை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே விளாத்திவிளை பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுப்பணித் துறையை வலியுறுத்துவது. மங்காடு ஊராட்சிக்குட்பட்ட ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முழுநேர மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசை கேட்டு கொள்ளவது, ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் சிவகுமார் மாவட்ட பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

மேலும் செய்திகள்