ஆதிவாசி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்
கோத்தகிரி அருகே ஆதிவாசி மக்களுக்கு நேரில் சென்று கொரோனா நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு நேரில் சென்று கொரோனா நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி அருகே உள்ள ஆதிவாசி கிராமங்களான குஞ்சப்பனை, கோழிக்கரை, கோழித்தொரை, பாவியூர், மேல்கூப்பு, கீழ்க்கூப்பு, அத்திபடிகை உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் சுமார் 300 குடும்பங்களுக்கு மளிகை, காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, சமூக நலத்திட்ட துணை தாசில்தார் காயத்ரி கலந்து கொண்டு ஆதிவாசி மக்களுக்கு தொகுப்புகளை வழங்கினர். இதில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி மற்றும் ஆதிவாசி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.