தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
கள்ளக்குறிச்சி அருகே சாலையில் தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் கர்ப்பிணி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கள்ளக்குறிச்சி
நிறைமாத கர்ப்பிணி
சங்கராபுரம் வட்டம் இளையனார் குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி சங்கீதா(வயது 23). நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக நேற்று முன்தினம் மதியம் வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பிரசவ வலி அதிகமானதால் சங்கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி உறவினர்களிடம் கூறினார்கள்.
ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது
இதையடுத்து சங்கீதா, இவருடைய மாமியார் ரோஸ்(45), உறவினர் வசந்தி(50) மற்றும் உதவியாளர் வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார ஆஷா பணியாளர் அமுதவள்ளி(35) ஆகியோருடன் 108 ஆம்புலன்ஸ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புறப்பட்டது. வேலூர் மாவட்டம் படைவேல் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மகன் சரத்குமார்(30) என்பவர் ஆம்புன்சை ஓட்டினார். உடன் செவிலியர் வடபொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த லஹாதீர்(25) சென்றார்.
ரோடு மாமந்தூர் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய ஆம்புன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா உள்ளிட்ட அனைவரும் கூச்சல் எழுப்பினர்.
6 பேர் படுகாயம்
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்து காயம் அடைந்த சங்கீதா, ரோஸ், வசந்தி மற்றும் ஆஷா பணியாளர் அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் செவிலியர் லஹாதீர், டிரைவர் சரத்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வேறொரு 108 ஆம்புலன்சில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சங்கீதாவுக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 பேர் பலியான சம்பவம்
கடந்த 10-ந் தேதி சங்கராபுரம் பகுதியிலிருந்து கர்ப்பிணியை பிரசவத்துக்காக 108 ஆம்புலன்சில் கள்ளக்குறிச்சி் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அரியபெருமானூர் ஏரிக்கரை அருகே சாலையோர மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த கர்ப்பிணி உள்பட 4 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தின் சோக சுவடுகள் மறைவதற்குள் நேற்று கள்ளக்குறிச்சி அருகே மற்றொரு 108 ஆம்புன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி உள்பட 6 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனம் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி இருப்பதால் இதில் மாவட்ட நிர்வாகனம் கவனம் செலுத்தி விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.