ஒரேநாளில் 12 ஆயிரத்து 783 பேருக்கு தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வமுடன் வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பெயர் பதிவு செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று 10 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.
இதையடுத்து அவை மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டன. இதனால் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் என மொத்தம் 51 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரும்பாலான இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஒருசில இடங்களில் கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
இவர்களில் பெயர் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. எனினும் அனைத்து இடங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 783 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்து 790 ஆக உயர்ந்தது.