கூடலூரில் ஏலக்காய் தோட்ட அதிபர் வீட்டில் 36 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை
கூடலூரில் ஏலக்காய் தோட்ட அதிபர் வீட்டில் 36 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் 12-வது வார்டு தொட்டியர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது56). ஏலக்காய் தோட்ட அதிபர். நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல் கோபால், குடும்பத்தினருடன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முருக்கடி அருகே உள்ள தங்களது ஏலக்காய் தோட்டத்திற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
நகை-பணம் கொள்ளை
பின்னர் அவர்கள் பீரோவில் வைத்திருந்த 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்தனர். இதையடுத்து தடயங்களை மறைப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய்பொடியை தூவினர்.
இந்தநிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கோபால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்தும், வீட்டிற்குள் மிளகாய்பொடி தூவி இருப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கூடலூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முகுந்தன், காளிமுத்து மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மோப்பநாய்
இதுகுறித்து கேரளாவில் இருந்த கோபாலுக்கு போலீசார் செல்போனில் தகவல் தெரிவித்து அவரை வரவழைத்தனர். இதையடுத்து அவர் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அவர் வீட்டில் வைத்திருந்த 36 பவுன் நகைகள் மற்றும் ஏலக்காய் விற்ற பணம் ரூ.3 லட்சம் ஆகியவை கொள்ளை போனதை அவர் உறுதி செய்தார். அவர் மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த 10 பவுன் நகை கொள்ளையர்களின் கண்களில் படாமல் தப்பியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. மேலும் மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி கூடலூர்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
பரபரப்பு
கோபால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 வங்கிகளில் அடகு வைத்திருந்த 46 பவுன் நகைகளை மீட்டு வீட்டில் வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். எனவே அவர் வங்கிகளில் நகைகளை மீட்டதை மர்மநபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.