பட்டர்புரூட் விலை வீழ்ச்சி

கொடைக்கானலில் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகாததால் பட்டர்புரூட் விலை வீழ்ச்சி அடைந்தது.

Update: 2021-06-25 15:00 GMT
கொடைக்கானல்: 

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், அவரை, வெள்ளைபூண்டு ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். 

இவற்றின் ஊடு பயிராகவும், தனியாகவும் ‘அவக்கோடா’ எனப்படும் பட்டர் புரூட் பழங்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த வகை பழங்கள் செண்பகனூர், சீனிவாசபுரம், கார்மேல்புரம், பள்ளங்கி, வில்பட்டி, ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் விளைகின்றது. 

மருத்துவ குணம் கொண்ட இந்த பழங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக பட்டர்புரூட் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. பழங்களை உள்ளூரிலே விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற பட்டர் புரூட் பழங்கள், தற்போது விலை குறைந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

எனவே தோட்டக்கலைத்துறை மூலம் பட்டர்புரூட் பழங்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கொடைக்கானல் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்