மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் மாதாந்திர சலுகை பயண அட்டையின் கால அவகாசம் நீட்டிப்பு அதிகாரி தகவல்
மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ.1,000-ம் மதிப்புள்ள மாதாந்திர சலுகை பயண அட்டையின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், ஒவ்வொரு மாதமும் விருப்்பம் போல் பயணம் செய்யும் ரூ.1000 மதிப்பிலான மாதாந்திர சலுகை பயண அட்டை 29 மையங்களில் ஒவ்வொரு மாதமும் 7-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நோய்த் தொற்று இல்லாத காலங்களில், ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டன.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, கடந்த மாதம் 10-ந்தேதி முதல் கடந்த 20-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது, நோய்த் தொற்று பெருமளவு குறைக்கப்பட்டு, பஸ்களை இயக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், கடந்த 21-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கடந்த 21-ந்தேதி மாநகர் போக்குவரத்துக் கழக மத்தியப் பணிமனையில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும் போது, கடந்த மாதம் 16-ந்தேதியில் இருந்து இந்த மாதம் 15-ந்தேதி வரை பயணம் செய்ய வழங்கப்பட்டிருந்த, விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டை ஜூலை மாதம் 15-ந்தேதி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், இந்த மாதம் வழங்கப்படும் பயண அட்டையின், கால அவகாசத்தை நீட்டித்து வழங்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனை ஏற்று, வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) வரையில், வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், வரும் 26-ந்தேதி வரை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29 மையங்களில் இந்த பயண அட்டையை பொதுமக்கள் பெற்றுக்கொண்டு, ஜூலை 15-ந்தேதி வரை பயணம் செய்யலாம்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட இடத்திற்கு மாத அடிப்படையில் பயணம் செய்ய, மாதாந்திர பயண சலுகைச் சீட்டு (1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையில்) விற்பனை செய்யப்படுகிறது. இந்த பயண சீட்டும், மாதம் ஒன்றுக்கு அதிகப்பட்சமாக, 40 ஆயிரம் அளவில் விற்பனையாகிறது.
கடந்த மாதம் 15-ந்தேதியில் இருந்து இந்த மாதம் 15-ந்தேதி வரையில் பயணம் செய்ய வழங்கப்பட்டுள்ள மாதாந்திர பயண சலுகைச் சீட்டும் ஜூலை 15-ந்தேதி வரையில் பயன்படுத்தி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்களை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் தெரிவித்தார்.