97 இருளர்களுக்கு சாதி சான்றிதழ்கள் ஆர்.டி.ஓ. வழங்கினார்

வண்டலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 97 இருளர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வண்டலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2021-06-25 04:03 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இருளர்கள் சாதி சான்றிதழ் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவுபடி, வண்டலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 97 இருளர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வண்டலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் கலந்துகொண்டு 97 இருளர்களுக்கு சாதி சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கும் இருளர் குடும்பத்தினருக்கும் வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்கள் சார்பாக அரிசி, மளிகை பொருட்கள், உணவு போன்றவற்றை ஆர்.டி.ஓ. வழங்கினார்.

இதில் வண்டலூர் தாலுகா அலுவலக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்