உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது.

Update: 2021-06-24 21:22 GMT
உடுமலை
உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. 
ஜமாபந்தி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ஜமாபந்தி அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். அப்போது கிராம கணக்கு தணிக்கை மட்டுமல்லாது பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் நேரடியாக பெறப்படும். இதில் சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நேற்று மற்றும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
இணைய வழியில் மனுக்கள்
 பொதுமக்கள் மனுக்களை இணையவழி மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்து உரியதீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 9 தாலுகாக்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான ஜமாபந்தி மனுக்களை அளிக்க தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல், அனைத்து விதமான இணையவழி சான்றுகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதளம் மூலமாகவோ, அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ அடுத்த மாதம் (ஜூலை) 31-ம்தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்என்றும் அறிவிக்கப்பட்டது. 
உடுமலை
அதன்படி உடுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது
உடுமலை தாலுகாவில் மொத்தம் 72 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஜமாபந்தியின் முதல்நாளான நேற்று  உடுமலை, குறிச்சிக்கோட்டை, பெரியவாளவாடி ஆகிய 3 பிர்காவில் (உள்வட்டம்) உள்ள 48 வருவாய் கிராமங்களின் நிலவரி வசூல், பயிர்சாகுபடிகணக்குகள், புறம்போக்கு இடங்கள் விபரம், பட்டாமாறுதல் உள்பட 24வகை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் கிராமநிர்வாக அலுவலர்கள் கிராம கணக்கு பதிவேடுகளை ஜமாபந்தியில் சமர்ப்பித்தனர்.
உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ்.வாசுகி நடத்தினார். ஜமாபந்தியில் உடுமலை தாசில்தார் வி.ராமலிங்கம், திருப்பூர் கலால் அலுவலக மேலாளர் டி.வெங்கடலட்சுமி, உடுமலை தலைமையிடத்து துணை தாசில்தார் டி.சுப்பிரமணியம், மண்டல துணை தாசில்தார் ஆர்.ரேவதி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இன்று
இன்று (வெள்ளிக்கிழமை) குடிமங்கலம் மற்றும் பெதப்பம்பட்டி ஆகிய 2பிர்காவில் (உள்வட்டம்) உள்ள மொத்தம் 24வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது. 

மேலும் செய்திகள்