வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு
பல்லடம் அருகே காஜாபட்டன் ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
பல்லடம்
பல்லடம் அருகே காஜாபட்டன் ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
காஜா பட்டன் ஒப்பந்தாரர் வீடு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த குப்புசாமி மகன் ராஜவேல் (வயது44). இவரது மனைவி தனபாக்கியம் (34). இவர்களது மகன் முத்துக்குமார் (17), மகள் சுஷ்மிதா (15). ராஜவேல் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் திருக்குமரன் நகரில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காஜா பட்டன் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது சொந்த ஊரில் இவருடைய தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து ராஜவேல் கடந்த 3-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான திருச்சுழிக்கு சென்று விட்டார். அதன்பின்னர் அங்கு அவரது தாயார் இறந்து விட்டதால் அவரது காரியங்கள் முடித்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பினார்.
ரூ.1¾ லட்சம் திருட்டு
பின்னர் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜவேல் குடும்பத்தினர் பின்பக்க கதவை பார்த்தபோது அதன் தாள்பாழ் உடைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பல்லடம் போலீசில் ராஜவேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் ராஜவேல் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்றதை அறிந்த ஆசாமிகள், அவருடைய வீட்டிற்கு சென்று பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.