ஆயுதங்களுடன் தாக்கி கொண்டதில் 2 வாலிபர்கள் படுகொலை
கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் கும்பல் ஆயுதங்களால் மோதிக்கொண்டதில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் கும்பல் ஆயுதங்களால் மோதிக்கொண்டதில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரியில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர் கொலை
புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் முருகன்குன்றத்தில் உள்ள 4 வழிச்சாலை ஓரத்தில் நேற்று மதியம் 1 மணிக்கு வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர்.
கொலை செய்யப்பட்டவர் சுனாமி காலனியை சேர்ந்த ஜேசுராஜ் (வயது 24) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இதனையடுத்து வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
மற்றொரு கொலை; போலீசார் அதிர்ச்சி
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஜேசுராஜ் பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். அவருக்கு கஞ்சா பழக்கம் இருந்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட பகுதியின் அருகே தான் ஜேசுராஜ் அடிக்கடி சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அவர்கள், ஜேசுராஜ் பிணமாக கிடந்த சுற்றுவட்டாரத்தில் சல்லடை போட்டு தேடினர். அப்போது சாலையோரம் புதர் நிறைந்த இடத்தில் மற்றொரு வாலிபர் பிணம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலிலும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய காயங்கள் காணப்பட்டன. கொலை செய்யப்பட்ட அந்த நபர், குண்டல் பகுதியை சேர்ந்த செல்வின் (25) என்பதும், அவரும் கஞ்சா பழக்கம் உடையவர் என்ற தகவலும் வெளியானது. கஞ்சா பழக்கம் உடைய 2 பேர் ஒரே பகுதியில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்த பரபரப்புக்கு இடையே சின்னமுட்டத்தை சேர்ந்த ஜெனிஸ் என்பவரும் கத்திக்குத்து காயங்களுடன் கன்னியாகுமரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரும் அந்த பகுதியில் நடந்த மோதலில் தொடர்புடையவர் என்ற தகவல் வெளியானது. அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கொலை நடந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
கஞ்சா போதையில் மோதல்?
கும்பலாக சேர்ந்து கஞ்சா பிடிப்பதில், கொலை செய்யப்பட்ட 2 பேருக்கும், காயமடைந்த ஜெனிசுக்கும் அதீத ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கொலை நடந்த பகுதியில் அவர்கள் உள்பட சிலர் கஞ்சா போதையில் இருந்த போது தகராறு ஏற்பட்டு, ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில், முன்விரோதம் காரணமாக இரு கும்பலாக பிரிந்து மோதிக்கொண்டு இரட்டைக்கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடக்கிறது.
பரபரப்பு
கன்னியாகுமரியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.