சாலை பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றம்

பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. மேலும் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டது.

Update: 2021-06-24 17:51 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. மேலும் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டது.

சாலை விரிவாக்கம் 

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 3,254 சதுர மீட்டரும், அரசு நிலம் 6,836 சதுர மீட்டர் நிலம் கையகப் படுத்தப்பட்டு உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.33 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. 

இதை தவிர சாலை பணிக்கு ரூ.34 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் வாகன போக்குவரத்து குறைந்து உள்ளது. இதை பயன்படுத்தி சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மரங்கள் வெட்டி அகற்றம் 

இந்த நிலையில் சப்-கலெக்டர் அலுவலக ரோட்டில் சாலை பணிக்கு இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதை தொடர்ந்து மின் மாற்றி மற்றும் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப் பட்டது. இந்த பணிகள் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. 

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சாலை அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளன. மேலும் இதுவரை 7 டிரான்ஸ்பார்மர்கள் (மின்மாற்றி), 50 மின்கம்பங்கள் மாற்றப்பட்டு உள்ளன. இன்னும் 3 மின்மாற்றிகள், 20 கம்பங்கள் மாற்றப்பட வேண்டும். 

85 சதவீத பணிகள்  

சில இடங்களில் மின் கம்பங்கள் மாற்றி அமைக்காமலும், கட்டிடங் கள் அகற்றப்படாமல் உள்ளதால் சாலை பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. மற்ற பகுதிகளில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

ஊரடங்கை பயன்படுத்தி முக்கிய சாலைகளில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை 85 சதவீதம் சாலை பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்