வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை திருட்டு

போடியில், வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிய துணிகரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-06-24 16:45 GMT
போடி:

ஈமச்சடங்கில் பங்கேற்க...

தேனி மாவட்டம் போடி நகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோ. அவருடைய மனைவி அன்னக்காமு (வயது 49). இந்த தம்பதிக்கு கார்த்திகை பிரியா என்ற மகளும், கவுதம் பிரபு என்ற மகனும் உள்ளனர். 

இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. கார்த்திகை பிரியா தேவதானப்பட்டியிலும், கவுதம் பிரபு மதுரையிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோ இறந்து விட்டார். இதனால் போடியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் அன்னக்காமு தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் தேவதானப்பட்டியில் வசிக்கிற கார்த்திகை பிரியாவின் கணவர் ஜெயகுமரன் இறந்து விட்டார். அவருடைய ஈமச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனது வீட்டை பூட்டி விட்டு தேவதானப்பட்டிக்கு அன்னக்காமு சென்று விட்டார்.

 45 பவுன் நகைகள் திருட்டு

இந்தநிலையில் முதல்தளத்தில் வசித்த அன்னக்காமு வீட்டின் கதவு, கடந்த 21-ந்தேதி திறந்து கிடந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர், அவருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அன்னக்காமு தேவதானப்பட்டியில் இருந்து போடிக்கு வந்தார்.

பின்னர் வீட்டுக்கு சென்ற அவர், கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பூஜை அறையில் நகைகள் வைத்திருந்த பை திருட்டு போய் இருந்தது. 

அந்த பையில் தங்க செயின்கள் உள்பட 15 வகையான 45¼ பவுன் நகைகள் இருந்தன. இதேபோல் வெள்ளிபொருட்கள் திருடப்பட்டன. அன்னக்காமு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்டு, மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

மோப்பநாய் சோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்- இன்ஸ்பெக்டர் அருண்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்பநாய் பைரவ் வரவழைக்கப்பட்டது. அது, மோப்பம் பிடித்து வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்களும் வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து 45 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம், போடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்