ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
கோவை
கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நூதன முறையில் கொள்ளைச்சம்பவங்கள் நடந்தன.
குறிப்பாக எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் மட்டுமே இந்த நூதன கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதில் தொடர்புடைய அமீர் என்பவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவையில் உள்ள ஒரு எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகே ராமமூர்த்தி சாலையில் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.50 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது அவர் கைகளில் சிறிய கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளை வைத்து இருந்தார்.
பின்னர் அவர் திடீரென அங்கு உள்ள ஏ.டி.எம். எந்திரத்தின் அடிப்பகுதியை கற்கள் மற்றும் கம்பியை கொண்டு உடைத்தார். அதில் எந்திரத்தின் முன்பக்க கதவு திறந்தது.
அதன்பிறகு அவர் பணம் வைக்கப்பட்டு இருந்த கதவை திறக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. பல முறை முயற்சி செய்தும் பலனில்லை என்பதால் அவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.
அலாரம் ஒலித்தது
இதற்கிடையே ஏ.டி.எம். எந்திரத்தை அவர் உடைக்கும்போது வங்கியின் தலைமை அலுவலகம் அமைந்து உள்ள ஐதராபாத்தில் அபாய எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.
இதையடுத்து அங்கு இருந்த அதிகாரிகள் கோவை வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அதிகாரிகள் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது ஏ.டி.எம்.எந்திரம் உடைக்கப்பட்டு, முன்பக்க கதவு திறந்து கிடந்தது. ஆனால் பணம் வைக்கப்பட்டு இருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை.
மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் அங்கு இல்லை.
இதையடுத்து போலீசார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்.மையத்துக்குள் புகுந்து கற்கள் மற்றும் கம்பிகளை கொண்டு எந்திரத்தை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
வாலிபர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். அப்போது செல்வபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர் தான் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது ன்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த அருணகிரி என்ற அஜய் (வயது 24) என்பதும், செல்வபுரம் ரங்கசாமி காலனியில் தங்கி இருந்து கோவை விமானநிலையம் அருகே சிட்ரா பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைதுசெய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எதற்காக நடந்தது?
இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உயர் அதிகாரி கூறும்போது, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றவர் பேக்கரி தொழிலாளி ஆவார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பேக்கரி கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் செலவுக்கு பணமின்றி தவித்து வந்து உள்ளார்.
வேறு எங்கு கேட்டாலும் பணம் கிடைக்காது என்ற நிலை வந்தபோது, ஏ.டி.எம்.மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த ஏ.டி.எம். மையத்தை தேர்ந்து எடுத்தார். ஊரடங்கும் தனக்கு கைகொடுக்கும் என்று கருதினார்.
தனது திட்டபடி நள்ளிரவு நேரத்தில், ஏ.டி.எம். மையத்துக்கு வந்த அவர், எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் அந்த முயற்சிக்கு பலனில்லை என்பதால் அவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
இருப்பினும் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், போலீசாரின் பிடியில் அவர் சிக்கி விட்டார் என்றார்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.