மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்து மாணவர்கள் போராட்டம்
ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்று கோரி பள்ளி மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்து மாணவர்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்று கோரி பள்ளி மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்து மாணவர்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வுகள் ரத்து
தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனை வரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் தங்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்று கோரி மாணவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ளது வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்த மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் 9-ம் வகுப்பில் சேர மாற்று சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. இதன்படி நேற்று காலை பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்த 8-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுக்கு அரசு பள்ளி இல்லாததால் தனியார் பள்ளியில் சேர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் எங்களின் பெற்றோரின் பொருளாதார நிலை பாதிக்கப்படும். மேலும், மருத்துவம் உள்ளிட்ட கல்வி பயில அரசின் இடஒதுக்கீடு பெற முடியாத நிலை ஏற்படும்.
மாற்றுச்சான்றிதழ் வேண்டாம்
எனவே, எங்கள் பள்ளியில் பாட வகுப்புகளுக்கு போதிய இடவசதி உள்ளதால் இந்த கல்வி ஆண்டு முதல் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், எனவே, எங்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வேண்டாம். அதுவரை நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறி பள்ளி வளாகத்தில் மாணவர்களும், அவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் பதாகைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி அங்கு விரைந்து வந்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் மற்றும் பெற்றோர்கள், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு இது தொடர்பான ஆணை வரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும்.
உறுதிமொழி
அதுவரை நீங்கள் அனைவரும் ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு சேர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் பாடபுத்தகங்கள், சீருடைகள் கிடைக்கும். இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டதும் நீங்கள் தாராளமாக இங்கு வந்து சேர்ந்து கொள்ளலாம். எனவே, போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினார்.
முதன்மை கல்வி அலுவலரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலைந்துசென்றனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி வேண்டும் என்று கோரி மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்து மாணவர்கள் பெற்றோர்களுடன்திடீர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.