செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல், செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் சின்னமனூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-24 15:34 GMT
சின்னமனூர்:

மனைவி இறந்த துக்கம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 36). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி முத்துமாரி. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்துமாரி இறந்து விட்டார். மனைவி இறந்த துக்கம் முனியப்பனை வாட்டியது. இதனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். 

அதன்படி நேற்று வழக்கம் போல அவர் மதுபானம் குடித்தார். போதை தலைக்கு ஏறியதும் அவருடைய பாதை மாறி விட்டது. மனைவி இறந்த பிறகு, தான் மட்டும் உயிர் வாழ்வதா? என அவர் நினைத்தார். மேலும் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தார். 

ஆனால் எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று யோசித்து கொண்டிருந்த போது, சீலையம்பட்டியில் உள்ள தனியார் செல்போன் கோபுரம் முனியப்பனின் கண்ணில் பட்டது. இதனால் யாரும் எதிர்பாராத விதமாக, செல்போன் கோபுரத்தில் விறு, விறுவென அவர் ஏறினார்.

தற்கொலை மிரட்டல்

150 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு முனியப்பன் சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தபடி அவர் கத்தினார்.

முனியப்பனின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். எந்த பிரச்சினை என்றாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்றும், தற்கொலை தீர்வு கிடையாது என்றும் அறிவுரை கூறி கீழே இறங்கி வருமாறு பொதுமக்கள் கூறினர். ஆனால் முனியப்பன் அவர்களை கண்டுகொள்ளவில்லை.

இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் குதித்து விடலாம் என்ற திக், திக் மனநிலையுடன் செல்போன் கோபுரத்தின் கீேழ அதிர்ச்சியுடன் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

பின்னர் முனியப்பனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் பேச்சுக்கு அவர் செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து கொண்டே இருந்தார்.

இ்தனையடுத்து முனியப்பனின் உறவினர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களின் பேச்சும் எடுபடவில்லை. இதனால் அவர் கீழே இறங்கி வருவதாக தெரியவில்லை. எனவே அங்கு பரபரப்பான சூழல் தொற்றிக்கொண்டது.

  செல்போன் கோபுரத்தில் ஏறி...

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரும் விரைந்தனர். அவர்களும், தங்களால் இயன்ற அளவுக்கு முனியப்பனிடம் பேசி பார்த்தனர். மாலை 4½ மணி அளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை, சுமார் 2½ மணி நேரத்துக்கும் மேலாக நீண்டது. 

எனினும் முனியப்பன், கீழே இறங்கி வர வாய்ப்பு இல்லை என்பதை தீயணைப்பு படையினர் அறிந்தனர். அதேநேரத்தில் போலீசார், உறவினர்கள், தீயணைப்பு படையினர் பேசுவதை காதுகொடுத்து கேட்கும் நிலையில் முனியப்பன் இல்லை.

அந்த அளவுக்கு அவர் போதையில் இருப்பதை அறிந்த தீயணைப்பு படையினர், செல்போன் கோபுரத்தில் ஏறி முனியப்பனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கயிறு கட்டி மீட்பு

அதன்படி தீயணைப்பு வீரர் முருகன், செல்போன் கோபுரத்தில் கயிறுடன் ஏறினார். பின்னர் கோபுரத்தின் உச்சியில் இருந்த முனியப்பனிடம் நைசாக பேச்சு கொடுத்தார். எந்த பிரச்சினை என்றாலும், கீழே இறங்கி வாருங்கள், தீர்த்து கொள்ளலாம் என்றார்.

ஒரு கட்டத்தில் முனியப்பன் கீழே இறங்கி வருவதாக தெரிவித்தார். ஆனால் போதையில் இருந்த அவரால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் தீயணைப்பு வீரர் முருகன், முனியப்பனை கயிற்றால் கட்டினார்.

பின்னர் முனியப்பனை கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறக்கி தரைக்கு கொண்டு வந்து விட்டார். முனியப்பனை கயிறு கட்டி இறக்குகிற காட்சியை திகிலுடன்் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பார்த்தனர்.

 போலீசார் எச்சரிக்கை

செல்போன் கோபுரத்தில் இருந்து இறக்கப்பட்ட முனியப்பன், சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு முனியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் தனது மனைவி இறந்த துக்கத்தாலும், சீலையம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் உள்ள வீடு இடிந்து விட்டதாலும் தற்கொலை செய்ய முடிவு செய்து செல்போன் கோபுரத்தில் ஏறியது தெரியவந்தது.

இதனையடுத்து, முனியப்பனுக்கு இனிவருங்காலத்தில் இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுரை வழங்கினர். 

இதனையும் மீறி ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முனியப்பனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 
செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் சின்னமனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
---------

மேலும் செய்திகள்