ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

மகளிர் சுகாதார வளாகம் கட்டித்தரக்கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-06-24 13:33 GMT
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெங்கசமுத்திரம் காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மகளிருக்கான சுகாதார வளாகம் கட்டித்தரக்கோரி, ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த காலனி பகுதியை சேர்ந்த மக்கள், ரெங்கசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். ஊராட்சி அலுவலகம் பூட்டியிருந்ததால், அதன் முன்பு கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் போஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, ரெங்கசமுத்திரம் காலனி பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.  இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ரெங்கசமுத்திரம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்