கொளத்தூரில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி

கொளத்தூரில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர்.

Update: 2021-06-24 04:52 GMT
செங்குன்றம், 

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 38-வது தெருவை சேர்ந்தவர் விஷால் (வயது 45). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அந்த கம்பெனியில் இருந்து கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ரூ.3 கோடி மதிப்புள்ள பொருட்களுக்கு இவர் ஜாமீன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பொருட்களை வாங்கிய கடைக்காரர்கள், பணத்தை கொடுக்காததால் கடந்த 10 நாட்களாக பணத்தை கேட்டு அந்த நிறுவனம், இவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த விஷால், நேற்று காலை அவருடைய மனைவி ஆர்த்தி (35), மகள்கள் ஷெரின் (16), திஷா (12) ஆகிய 4 பேரும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இதனால் வீட்டில் மயங்கி கிடந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அயனாவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்