தென்காசியில் இணைப்புப்பாதை சீரமைப்பு
தென்காசியில் மழையால் சேதமடைந்த இணைப்புப்பாதை சீரமைத்து திறக்கப்பட்டது.
தென்காசி:
தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையில் உப மின்நிலையம் அருகே அரிகரா நதியும், சிற்றாறும் இணையும் இடமான முக்கூடல் ஆற்றின் மீது புதிதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் முழுமையாக பணிகள் முடிவடைந்த நிலையில் இணைப்புப்பகுதி பணிகள் மட்டும் மழைக்காலம் முடிந்தவுடன் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த பகுதி வழியாக செல்லும் சாலை கேரள மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால் இணைப்புப்பாதை அமைக்கும் பணியில் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டனர். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூன்று முறை அந்த பாதை சேதமடைந்தது. இதனை சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று முடிவடைந்தது. இதனையடுத்து இருசக்கர வாகனங்கள் மட்டும் இந்த பாதையில் நேற்று முதல் செல்லத் தொடங்கின. பெரிய வாகனங்கள் செல்வதற்கு போதுமான இடவசதி இல்லை. மேலும் மின்கம்பங்கள் சிலவற்றை அகற்றினால்தான் கனரக வாகனங்கள் செல்ல முடியும். எனவே தற்போது இருசக்கர வாகனங்கள் மட்டும் இந்த பாதையில் செல்கின்றன.