கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது
நாகர்கோவிலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
கோவேக்சின் தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பு இருக்கும் தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள் மூலமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் முகாம் அமைத்து கோவேக்சின் 2-வது டோஸ் போடப்பட்டது.
இதற்காக அந்த முகாமுக்கு 300 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இருந்தன. மேலும் 18 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதை தொடா்ந்து அவர்களுக்கு காலை 8.30 மணிக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் 9.30 மணி முதல் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசியை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்திக் கொண்டனர்.
தடுப்பூசிகள் வந்தன
இதே போல செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், முட்டம், கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குட்டகுழி, கோத நல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பூதப்பாண்டி, குழித்துறை மற்றும் பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.இதற்கிடையே நேற்று 5 ஆயிரத்து 600 கோவேக்சின் தடுப்பூசியும், 13 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசியும் குமரி மாவட்டத்துக்கு வந்தது. அவை இன்று (வியாழக்கிழமை) முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட உள்ளன.