நண்பரை கொன்ற வழக்கில் வாலிபர் கைது

ஆரல்வாய்மொழியில் நண்பரை கொன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். விளையாட்டு விைனயாகி விட்டது என அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2021-06-23 20:58 GMT
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் நண்பரை கொன்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். விளையாட்டு விைனயாகி விட்டது என அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொழிலாளி கொலை
ஆரல்வாய்மொழி அழகிய நகர் இந்திரா காலனியை சேர்ந்தவர் ராமன் (வயது 41), தொழிலாளி. ராமன் சம்பவத்தன்று அழகிய நகர் பகுதியில் உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அவரது நண்பர் கிறிஸ்து நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த சாமுவேல் (30) மது குடிக்க வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. 
ராமன் மறுத்ததால், சாமுவேல் அவரை பிடித்து தள்ளியதாக தெரிகிறது. இதில் ராமன் அருகில் உள்ள ஓடையில் தலை குப்புற விழுந்து காயம் அடைந்த அவர், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். 
வாலிபர் கைது
அதை தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீசார் கொலை வழக்காக மாற்றி சாமுவேலை கைது செய்தனர். 
அப்போது அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு வினையாகி விட்டது
நான், ராமன் மற்றும் நண்பர்கள் சிலர் அடிக்கடி அப்பகுதியில் ஒன்றாக மது குடிப்பது வழக்கம். இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறந்த தினத்தன்று மது வாங்கிக்கொண்டு வந்தேன். அப்போது ராமன் அழகிய நகர் பகுதியில் உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்தார். ராமனை மது குடிக்குமாறு சொன்னேன். அதற்கு அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மீண்டும் வற்புறுத்தினேன் அதற்கும் சம்மதிக்கவில்லை. இதனால் ராமனை நான் தள்ளிவிட்டேன். அவர் ஓடையில் விழுந்ததால், படுகாயம் ஏற்பட்டது. பிறகு அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். விளையாட்டு வினையாகும் என நான் நினைக்கவில்லை.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் சாமுவேலை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்