விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களை சிகிச்சைக்கு அனுப்பாமல் விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர்
குமாரபாளையம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த கட்டிட தொழிலாளர்களை சிகிச்சைக்கு அனுப்பாமல் விசாரணை நடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
நாமக்கல்,
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 30). தண்டராம்பேட்டையை சேர்ந்தவர் பெரியசாமி (31). கட்டிட தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் கடந்த 21-ந் தேதி திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு கட்டிட வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
குமாரபாளையம் காவிரி பாலம் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தவறி கீழே விழுந்த 2 பேரின் கால்களில் கன்டெய்னர் லாரியின் டயர் ஏறி இறங்கியது. இதில் ராமசந்திரன், பெரியசாமி ஆகிய இருவரின் கால்களும் சிதைந்து, ரத்தம் அதிகமாக வெளியேறியது.
இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அத்தியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அத்தியப்பன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு, உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்காமல், அவர்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தார்.
இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் ஆம்புலன்சு மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அத்தியப்பன், விபத்தில் படுகாயம் அடைந்த கட்டிட தொழிலாளர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பாமல், விசாரணை நடத்தி கால தாமதம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் படுகாயம் அடைந்த கட்டிட தொழிலாளி, ‘சார் வலிக்குது சார்’ என அலறுவது போன்றும், அதை காதில் வாங்கி கொள்ளாமல் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி கொண்டிருந்த காட்சியும் பதிவாகி இருந்தது. இதைப்பார்த்த பலரும் போலீசாருக்கு தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் விசாரணை நடத்தினார். பின்னர் அவர், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
விபத்தில் படுகாயம் அடைந்த கட்டிட தொழிலாளர்களிடம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை என்ற பெயரில் மனிதநேயமில்லாமல் நடந்த சம்பவம் நாமக்கல் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.