மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

காதல் தோல்வியால் விரக்தி அடைந்த வாலிபர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்

Update: 2021-06-23 20:27 GMT
தா.பழூர்
 அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் வீரமணிகண்டன் (வயது 26). கூலித் தொழிலாளியான இவர் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில் இவர் காதலித்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காதலில் தோல்வி அடைந்த அவர் தன்னையும், காதலியையும் சேர்த்து வைக்கக்கோரி காரைக்குறிச்சி கிராமத்தில் சுமார் 150 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி நின்று கொண்டு கைகளில் கத்தியால் கீறிக் கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூச்சலிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரிடம் கீழே இறங்கி வருமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அவர் கீழே இறங்கி வரவில்லை.
பின்னர் சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் வந்து அந்த வாலிபரிடம் பேச்சு கொடுத்தபடியே மற்றொரு வழியாக போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்களை நீர்த்தேக்க தொட்டியில் ஏறச் செய்தார். அதன்படி நீர்த்தேக்க தொட்டியில் ஏறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், லாவகமாக வீரமணிகண்டனை பிடித்தார். பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கேயே அந்த வாலிபருக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்தனர். பின்னர் கத்தியால் கீறிக் கொண்டதில் கைகளில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 

மேலும் செய்திகள்