குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை உளியால் குத்திய கணவன் கைது

குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை உளியால் குத்திய கணவன் போலீசார் கைது செய்தனர்,

Update: 2021-06-23 06:09 GMT
தாம்பரம், 

மேற்கு தாம்பரம், ஆயில் மில் தெருவைச் சேர்ந்தவர் மார்டின் (வயது 38). இவரது மனைவி ரோஸ்லின் எலிசபெத் (34). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மார்ட்டின் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரோஸ்லின் எலிசபெத்தின் தந்தைக்கு சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் பழைய பெருங்களத்தூர், கண்ணபிரான் தெருவில் உள்ள தந்தை வீட்டில் தங்கி அவரை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரோஸ்லின் எலிசபெத்தை ஆயில் மில் தெருவில் உள்ள வீட்டிற்கு குடும்பம் நடத்த வருமாறு மார்டின் அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததால் தான் மறைத்து வைத்திருந்த உளியால் சரமாரியாக ரோஸ்லின் எலிசபெத்தை குத்தி உள்ளார். இதில் கழுத்து, தோள்பட்டை உட்பட 12 இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது தடுக்க சென்ற ரோஸ்லின் எலிசபெத்தின் அம்மா மேரி (58) என்பவருக்கும் குத்து விழுந்தது. பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்டினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்