தென்காசியில் மழையால் சேதமடைந்த இணைப்பு பாதை சீரமைப்பு
தென்காசியில் மழையால் சேதமடைந்த இணைப்பு பாதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
தென்காசி:
தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் மெயின் ரோட்டில் உப மின்நிலையம் அருகில் அரிகரா நதியும், சிற்றாறும் இணையும் இடமான ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை தென்காசியில் இருந்து இலஞ்சி, செங்கோட்டை, புளியரை மற்றும் இவற்றை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திற்கும் செல்லும் முக்கிய சாலை ஆகும். கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அதிகமாக செல்லக்கூடிய சாலை.
கடந்த 3 மாதங்களாக இந்த பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக இந்த பாலம் பணிக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து பாலத்தை கட்டிவரும் கட்டுமான நிறுவனத்தினர் இணைப்பு பாதை அமைத்து வந்தனர். இந்த பாதையும் தென்மேற்கு பருவ மழையினால் மூன்று முறை சேதமடைந்தது.
இந்த நிலையில் இணைப்பு பாதை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. நேற்றுடன் அந்த பணி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் இந்த பாதையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய பாலம் கட்டும் பணியில் இருபுறமும் முழுமையாக பணிகள் முடிவடைந்துவிட்டன. மையப்பகுதியில் மட்டும் இணைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளன. தற்போதைய மழை காலம் முடிந்த பிறகு பாலம் பணி மீண்டும் தொடங்கும் என்றும், அவ்வாறு தொடங்கப்பட்ட சுமார் 20 நாட்களுக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் கட்டுமான நிறுவனத்தினர் கூறினர்.