அம்பையில் பிரசவத்தின்போது குழந்தை சாவு; ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

அம்பையில் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-06-22 19:54 GMT
அம்பை:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் புதுமனை தெருவை சேர்ந்தவர் நைனா முகம்மது. மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது மனைவி பாத்திமா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாத்திமாவை அம்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் பாத்திமாவுக்கு கடந்த 19-ந் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அம்பையில் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தின்போது குழந்தை இறந்தது என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாக்டர்கள் அஜாக்கிரதையால்தான் குழந்தை இறந்துள்ளது எனக்கூறி நேற்று மதியம் நைனா முகம்மது- பாத்திமாவின் உறவினர்கள் திடீரென ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் முத்து கண்ணன் ஆகியோர் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது பாத்திமாவின் தந்தை மைதீன்பிச்சை அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே பாத்திமா குடும்பத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பாத்திமா முதல் பிரசவத்துக்காக அம்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சரியான நேரத்தில் உரிய முறையில் பேறுகால பணியை மேற்கொள்ளாததால் குழந்தை இறந்து விட்டது. டாக்டர்கள் கவனக்குறைவால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்