நெல்லை மாவட்டத்தில் மாயமான ரூ.6¾ லட்சம் செல்போன்கள் மீட்பு

நெல்லை மாவட்டத்தில் மாயமான ரூ.6¾ லட்சம் செல்போன்களை போலீசார் மீட்டனர்.

Update: 2021-06-22 19:48 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் செல்போன்கள் திருட்டு, வழிப்பறி, மாயமானதாக பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி அதனை மீட்கும் பணி நடந்தது. மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீமைசாமி தலைமையிலான போலீசார், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜரத்தினம்‌, அச்சுதன் ஆகியோர் அடங்கிய போலீசார், மாயமான மற்றும் திருட்டுபோன  செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்து 460 மதிப்புள்ள 50 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து கண்டுபிடித்து, அதனை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட செல்போன்களை, அந்தந்த போலீஸ் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று, மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. அவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஒப்படைத்தார். 

பின்னர் அவர் கூறும்போது, ‘இதுவரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ரூ.32 லட்சத்து 7 ஆயிரத்து 535 மதிப்புள்ள 264 செல்போன்களை மீட்டுள்ளனர். இதுவரை மீட்கப்பட்ட செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று (அதாவது நேற்று) வழங்கப்பட்ட செல்போன்கள், அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் நலன் கருதி செல்போன்களை போலீசார் நேரடியாக அவர்கள் வீட்டுக்கே சென்று உரியவர்களிடம் வழங்குவார்கள்’ என்றார்.

பின்னர் செல்போன்களை மீட்ட போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்