பல்லடத்தில் குழந்தையை தம்பதி புதைத்த சம்பவத்தில், அந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பல்லடத்தில் குழந்தையை தம்பதி புதைத்த சம்பவத்தில், அந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பல்லடம்,
பல்லடத்தில் மூச்சுத்திணறி குழந்தை இறந்ததாக கூறி போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தையை தம்பதி புதைத்த சம்பவத்தில், அந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குழந்தை பிறந்தது
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்தவர் சண்முகம் (வயது 46). தனியார் பஸ் டிரைவர். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜே.கே.ஜே. காலனியில் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு உடுமலையை சேர்ந்த தனலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் தனலட்சுமி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 12-ந்தேதி பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது தனலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக குழந்தையுடன் ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.அங்கு தனலட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
குழந்தையுடன் தாய் மாயம்
இதற்கிடையில் திடீரென ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு தெரியாமல் கணவர் சண்முகம் மற்றும் குழந்தையுடன் பல்லடத்தில் உள்ள வீட்டிற்கு தனலட்சுமி வந்து விட்டார். இதனால் தனலட்சுமியையும், அவருடைய குழந்தையையும் காணாததால் அவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தேடி உள்ளனர். இதுகுறித்து பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் தனலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டில் தனலட்சுமி இருந்தார். அவருடன் குழந்தை இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவ பணியாளர்கள் தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனலட்சுமி, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் கட்டைப்பையில் துணிகளுக்கு இடையே குழந்தையை வைத்து வீட்டிற்கு எடுத்து வந்ததாகவும், வீட்டிற்கு வந்து பார்த்த போது மூச்சுத்திணறி குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
புதைத்தனர்
மேலும் அவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் பூமலூர் ரோட்டில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதையடுத்து, பல்லடம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, குழந்தையின் உடலை தகவல் தெரிவிக்காமல் புதைத்தது குறித்தும், குழந்தை எப்படி இறந்தது? என விசாரிக்கும்படியும் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
இந்த நிலையில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவையிலிருந்து மருத்துவ குழுவினர் டாக்டர் ஜெயசிங், கோபிநாத், ரவி ஆகியோரும் தொழில்நுட்ப உதவியாளர்கள் கருணாகரன், சிவக்குமார் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். பல்லடம் தாசில்தார் தேவராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில் பிரபு, விஜயகுமார், கிருஷ்ணகுமார், அமல்தாஸ் மற்றும் போலீசார் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் குழந்தையை புதைத்த இடத்திற்கு பெற்றோர் சண்முகம், தனலட்சுமி ஆகியோர் உடன் சென்றனர். அங்கு குழந்தை புதைத்த இடத்தை சண்முகம் அடையாளம் காட்டினார்.
இதையடுத்து அந்த இடத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் கோவையில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.
இதுகுறித்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் கூறும்போது “ குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை விவரத்தை கோவை மருத்துவக்குழுவினர் அளித்த பின்பு, அதன் விவரங்களை தெரிந்து கொண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.