மாணவிகளுக்கு போனில் பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
முதுகுளத்தூரில் மாணவிகளுக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்ததாக அறிவியல் ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
முதுகுளத்தூர், ஜூன்,
முதுகுளத்தூரில் மாணவிகளுக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்ததாக அறிவியல் ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றுபவர் ஹபீப் முகம்மது (வயது 36). இவர் மாணவிகளின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு, மாணவிகளின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவர்களுடன் பேசி, புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி வர மறுத்தால் மதிப்பெண் குறைவாக போட்டு தேர்ச்சி அடைய விடாமல் செய்து விடுவேன் என்று மாணவிகளுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசுவது, ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது உள்ளிட்ட பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆசிரியர் ஹபீப் முகம்மது மாணவிகளிடம் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கைது
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் கூடுதல் சூப்பிரண்டு லயோனல் இக்னேஷியஸ், முதுகுளத்தூர் துணை சூப்பிரண்டு ராகவேந்திரா ரவி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்தன. இதையடுத்து போலீசார் நேரடியாக வீட்டுக்குச் சென்று ஆசிரியர் ஹபீப் முகம்மதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.