போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த வாலிபர் உள்பட 5 பேரை வழிமறித்து தாக்குதல்
இடப்பிரச்சினை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார்கொடுத்த வாலிபர் உள்பட 5 பேரை வழிமறித்து தாக்கிய சம்பவத்தில் 2 பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்
உளுந்தூர்பேட்டை
முன்விரோதம்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கோவிந்தராஜ பட்டணம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் ராமதாஸ்(வயது 30). தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவரது இடத்தில் பாதை அமைப்பது சம்பந்தமாக இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அய்யனார்(47) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று இடப்பிரச்சனை சம்பந்தமாக ராமதாஸ் தனது உறவினர்கள் பிரபு, இவரது மகன் கண்ணன், இவரது மகன் குமார், இவருடைய மனைவி நதியா ஆகிய 5 பேரும் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மீண்டும் கோவிந்தராஜ பட்டணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வழிமறித்து தாக்குதல்
வீ்ட்டின் அருகே வந்தபோது ராமதாஸ் உள்பட 5 பேரையும் அய்யனார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேலன்(28) உள்பட சிலர் வழிமறித்து ஆபாசமாக திட்டி சாதிப்பெயரை சொல்லி அவமானப்படுத்தியதோடு உருட்டு கட்டை மற்றும் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதில் ராமதாஸ் மற்றும் அவரது உறவினர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
2 பேர் கைது
பின்னர் இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமொழியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவுசெய்து அய்யனார், சிங்காரவேலன் ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வீரப்பன், பாலமுருகன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.