தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தை மீட்பு- தம்பதி உள்பட 4 பேர் கைது

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தையை நேற்று போலீசார் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-22 17:28 GMT
தர்மபுரி:
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளங்குழந்தையை நேற்று போலீசார் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பச்சிளங்குழந்தை கடத்தல்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூர் பகுதியை சேர்ந்தவர் அருள்மணி. தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி மாலினி (வயது 19). இவருக்கு கடந்த 19-ந்தேதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி காலை பிரசவ வார்டில் இருந்து பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது.
இதையடுத்து குழந்தையை மீட்க தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஒரு பெண் கையில் குழந்தையை எடுத்து செல்வது தெரியவந்தது.
போலீசார் மீட்டனர்
இதைத்தொடர்ந்து தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளில், குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் நடந்த நேரத்தில் இருந்த வாகன போக்குவரத்து தொடர்பான பதிவுகளை பார்வையிட்டு போலீசார் தீவிர ஆய்வு நடத்தினார்கள். அப்போது தர்மபுரியில் உள்ள இருவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் ஆண் ஒருவருடன் அமர்ந்து செல்லும் ஒரு பெண் தனது கையில் கைக்குழந்தையை வைத்திருப்பது தெரியவந்தது.
அந்த பெண் கையில் எடுத்து செல்வது தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை என்பது போலீசார் விசாரணையில் உறுதியானது. மேலும் இண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட்ட குழந்தை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பச்சிளங்குழந்தையை நேற்று காலை மீட்டனர்.
4 பேர் கைது
குழந்தை கடத்தல் தொடர்பாக இண்டூரை சேர்ந்த தஞ்சியா, அவருடைய கணவர் ஜான்பாஷா (24), தஞ்சியாவின் தாயார் ரேஷ்மா (41), பாட்டி பேகம்(60) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர்  மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தையை தர்மபுரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் முன்னிலையில் தந்தை அருள்மணி, பாட்டி ஜெயலட்சுமி ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
பச்சிளங்குழந்தை கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்