சுற்றுலா தலங்கள் 2 மாதங்களாக மூடப்பட்டு உள்ளதால் வருமானம் இன்றி தவிக்கும் சாலையோர வியாபாரிகள்
சுற்றுலா தலங்கள் 2 மாதங்களாக மூடப்பட்டு உள்ளதால், அதன் அருகே சாலையோரத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
ஊட்டி
சுற்றுலா தலங்கள் 2 மாதங்களாக மூடப்பட்டு உள்ளதால், அதன் அருகே சாலையோரத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
வருமானம் இன்றி ...
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. 2 மாதங்களை கடந்தும் தளர்வுகள் இல்லாததால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி சுற்றுலா தலங்கள் அருகே கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தவர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே 150 கடைகள், படகு இல்லம் முன்பு 120 கடைகள், ரோஜா பூங்கா அருகே 6 கடைகள், தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் நடைபாதை வியாபாரிகள் 20 பேர் மற்றும் பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் முன்பு வியாபாரிகள் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
இவர்கள் உல்லன் ஆடைகள், ஊட்டி வர்க்கி, சாக்லேட், பழங்கள், பொம்மைகள் போன்றவற்றை விற்பனை செய்ததுடன், அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தனர்.
நிவாரண தொகை வேண்டும்
தற்போது சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் கடைகள் மூடப்பட்டு உள்ளது. தாவரவியல் பூங்கா அருகே நடைபாதை ஓரத்தில் கடைகளை வியாபாரிகள் திறந்து வைத்தும், பொருட்களை வாங்க ஆள் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. கடைகள் 2 மாதங்களாக மூடப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டும் கோடை சீசனில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. நடப்பாண்டிலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வருமானம் இன்றி தவித்து வருகிறோம்.
குழந்தைகளின் படிப்பு செலவு, முதியவர்களின் மருத்துவ செலவை கவனிக்க முடியவில்லை. எனவே, எங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றனர்.