எட்டயபுரம் அருகே லாரி, மோட்டார்சைக்கிள் மோதியதில் மீன் வியாபாரி பலி
எட்டயபுரம் அருகே நேற்று மாலை லாரி, மோட்டார்சைக்கிள் மோதியதில் மீன் வியாபாரி இறந்தார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே நேற்று மாலை லாரி, மோட்டார்சைக்கிள் மோதியதில் மீன் வியாபாரி இறந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
மோட்டார்சைக்கிள் மீது மோதல்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராம். மீன் லாரி டிரைவரான இவர் நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து மதுரையை நோக்கி லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தை அடுத்து தூத்துக்குடி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வழியாக எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த மாரி குமார் (வயது 24), வன்னிய ராஜ் (52) ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாரி மீது அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மாரிகுமார், வன்னியராஜ் ஆகிய இருவரும் லேசான சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மீன் வியாபாரி பலி
பின்னர் அந்த லாரி 3 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மீன் வியாபாரிகளான பூவலிங்கம் (40), ஈஸ்வரன் (40) ஆகிய இருவரும் எட்டயபுரத்தை அடுத்த பாப்பாத்தி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப வந்தனர். அப்போது அந்த லாரி அவர்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பூவலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஈஸ்வரன் பலத்த காயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயம் அடைந்த ஈஸ்வரனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
டிரைவர் கைது
பின்னர் போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து டிரைவர் பொன்ராமை கைது செய்தனர்.பூவலிங்கம் உடலை போலீசார் கைப்பற்றி விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.