விளாத்திகுளம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் லாரி டிரைவர் கைது
விளாத்திகுளம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் நேற்று காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றங்கரை கிராமப்பகுதியில் வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. மொத்தம் 2½ டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநர் கயத்தாறு அருகே அகிலாண்டபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் மகாராஜன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.