கூவம் முகத்துவாரம் அகலப்படுத்தும் பணி ஆய்வு; பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

சென்னையில் மருத்துவமனை புனரமைப்பு பணி மற்றும் கூவம் முகத்துவாரம் அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2021-06-22 09:24 GMT
புறநகர் மருத்துவமனை
சென்னை பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.12.50 கோடி மதிப்பில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.5 தளங்களுக்கும் படிக்கட்டுகள் வழியாகவும், சாய்தளங்களின் வழியாகவும் சென்று பணிகளின் தரம் மற்றும் வேகத்தினை ஆய்வு மேற்கொண்டு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.

புறநோயாளிகள் பிரிவு, சி.டி. ஸ்கேன் அறை, ஆய்வகம், கழிவறைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, கொரோனா படுக்கைகள் பகுதி ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். கூடுதலாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் என்ன? என்பதைக் கேட்டறிந்து அனைத்து வசதிகளையும் செய்து பணிகளை தரமாக விரைந்து முடித்து கொடுக்க பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) இரா.விஸ்வநாத், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர். நாராயணபாபு, செயற்பொறியாளர்கள் எம்.வசுதேவன், சிவகாமி, தலைமை மருத்துவ அலுவலர் ஹேமலதா மற்றும் துறை உடனிருந்தனர்.

கூவம் முகத்துவாரம் அகலப்படுத்தும் பணி
நீர்வளத் துறையின் சார்பில் ரூ.70 கோடி மதிப்பில் நடைபெறும் கூவம் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி மற்றும் கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது.கூவம் முகத்துவாரத்தை தற்காலிகமாக அகலப்படுத்தும் பணி தினமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக மாதம் தோறும் ரூ.10 லட்சம் செலவிடப்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வாக தற்போது அரசு ரூ.70 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் ளித்துள்ளது. இம்முகத்துவாரத்தின் வடக்கு மற்றும் தெற்கு பக்கம் நீரோட்ட சுவர்கள் மற்றும் நேப்பியார் பாலம் வரை தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது என பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கு விரைவில் சுற்றுச்சூழல் அனுமதி பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வின்போது ஆரனியார் வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ஜெயக்குமாரி மற்றும் உதவிச் 
செயற்பொறியாளர்கள் பாலமோகனமுருகன், விஜயராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்