கங்கைகொண்டான் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா
கங்கைகொண்டான் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே மானூர் யூனியனை சேர்ந்த சித்தார் சத்திரம் பஞ்சாயத்து பருத்திகுளம் கிராமத்தில் கடந்த ஓராண்டு காலமாக சீவலப்பேரி குடிநீர் வரவில்லை எனவும், இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மானூர் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யாக்கோபு மற்றும் கங்கைகொண்டான் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு, வாறுகால் பிரச்சினை ஆகியவற்றை உடனடியாக சரிசெய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ஒரு வார காலத்திற்குள் சரிசெய்யாவிட்டால் மீண்டும் நாற்கர சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.