கூடுதல் நேரத்துடன் மளிகை, டீக்கடைகள் செயல்பட்டன
புதிய தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் கூடுதல் நேரத்துடன் மளிகை, டீக்கடைகள் செயல்பட்டன
திருச்சி
கூடுதல் தளர்வுகள்
திருச்சி உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் கூடுதல் தளர்வாக அத்தியாவசிய தேவைக்கான கடைகளை இரவு 7 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 2-ம் வகை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் திருச்சியில் ஊரடங்கின் கூடுதல் தளர்வுகள் நேற்றுமுதல் அமலுக்கு வந்தன.
அதன்படி காய்கறி, மளிகை, மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள், பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டன. பேக்கரி, உணவகங்கள் (பார்சல் சேவை மட்டும்), மின் வணிக சேவை நிறுவனங்கள், நொறுக்குத் தீனிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டன. டீக்கடைகள் (பார்சல் சேவை மட்டும்) காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டன.
அரசு அலுவலகங்கள்
மின்சாதனப்பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள், மெக்கானிக் ஷாப்கள், புத்தக நிலையங்கள், செருப்பு கடைகள், பேன்சி கடைகள், சலவையகங்கள், கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மின்னணு-வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை-பழுது நீக்கும் கடைகள் உள்ளிட்டவை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டன. அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன. இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன. சார்பதிவாளர் அலுவலகம் முழுமையாக இயங்கின. அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கின.
இ-பதிவு நடைமுறை
வாடகை வாகனங்கள் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வாடகை டாக்சிகளில் ஓட்டுனர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகளும் பயணம் செய்தனர். ஹார்டுவேர் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்போன் பழுது நீக்கும் கடைகள், கண்ணாடி விற்பனை கடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், மண்பாண்டம் மற்றும் கைவினை பொருட்கள் தயாரித்தல் போன்றவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டன. இதனால், கடைகளிலும், சாலைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.