மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு: எடியூரப்பா உருவ பொம்மையை ஆற்றில் மூழ்கடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடந்தது
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் எடியூரப்பா உருவ பொம்மையை காவிரி ஆற்றில் மூழ்கடித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:-
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் எடியூரப்பா உருவ பொம்மையை காவிரி ஆற்றில் மூழ்கடித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசு தற்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட திட்டமிட்டு உள்ளது. இதற்கு தமிழக காவிரி டெல்டா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மேகதாதுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பா உருவ பொம்மையை ஆற்று தண்ணீரில் மூழ்கடித்து நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன கோஷங்கள்
கும்பகோணம் மேலக்காவேரி காவிரி ஆற்றுப்பாலம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் தலைமை தாங்கினார். இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பாபநாசம்
மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து பாபநாசம் ரெயில் நிலையம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் சட்டத்துக்கு புறம்பாக அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் பாபநாசம் தாலுகாவை சேர்ந்த தமிழக காவிரி விவசாயிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.