சேவூர் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

சேவூர் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

Update: 2021-06-21 18:50 GMT
சேவூர்
 சேவூர் அருகே போத்தம்பாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவினாசி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரி, தனிப்பிரிவு போலீஸ் வெள்ளியங்கிரி உள்பட போலீசார் சாவக்கட்டுப்பாளையம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த புஞ்சை தாமரைக்குளம் ரங்கசாமி மகன் அருள்குமாரிடம் (வயது 30) சோதனை செய்தபோது ஒரு லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில் போத்தம்பாளையம் மணியின் மகன் மூர்த்தி (45) யிடம் வாங்கி வந்ததாக கூறினார். உடனே போத்தம்பாளையத்தில் உள்ள மூர்த்தியின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது வீடு அருகே இருந்த காலி இடத்தில் 2 லிட்டர் சாராயம், 80 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து 2 லிட்டர் சாராயம் மற்றும் 80 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து மூர்த்தி மற்றும் அருள்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்